தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு
Updated on
1 min read

சென்னை: நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.

1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிவுடன் பரிசீலித்து 1.01.2022 முதல் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்ததுபோல, இந்த ஆண்டு ஜனவரி முதல் 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு என தனித் துறையை உருவாக்க வேண்டும். பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பொட்டலத்தில் அடைத்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 7, 8, 9-ம் தேதிகளில் சில கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in