மதுரையில் இருந்து உ.பி.யின் பிரக்யாராஜ் நகருக்கு 2-வது தனியார் ரயில் 

மதுரையில் இருந்து உ.பி.யின் பிரக்யாராஜ் நகருக்கு 2-வது தனியார் ரயில் 
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மதுரையில் இருந்து சென்னை வழியாக உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகருக்கு 2-வது ‘பாரத் கவுரவ்' தனியார் ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், பாரம்பரியத்தை பறைசாற்றவும் 'பாரத் கவுரவ்' ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் எனவும், இந்த ரயில்கள் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மட்டுமல்லாது, தனியாராலும் நிர்வகிக்கப்படும், குத்தகை அடிப்படையில் ரயில் சேவைகளை தனியார் மேற்கொள்ளலாம் என ரயில்வே சார்பில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாரத் கவுரவ் ரயில்கள் திட்டத்தின்கீழ் நாட்டின் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூரு, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்நகரை சென்றடைந்தது.

இதன் தொடர்ச்சியாக, மதுரையில் இருந்து சென்னை வழியாக உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகருக்கு 2-வது ‘பாரத் கவுரவ்' தனியார் ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் தனது முதல் பயணத்தை வரும் 23-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிரக்யாராஜ் சென்று திரும்ப மதுரை வருவது என்ற அடிப்படையில் 12 நாட்கள் சுற்றுலாவாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் 6 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in