‘சென்னையில் அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை’

‘சென்னையில் அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை’
Updated on
1 min read

சென்னை: அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசின் சமூக நலன் மற்றம் சத்துணவுத் திட்டத் துறை ஆகியவற்றின் கீழ் சமூகப் பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலின் படியும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு பாதுகாப்பு மற்றும் பராமாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் இல்லங்களை பதிவு செய்து, இளைஞர் நீதிச்சட்டம் 2015-ன் கீழ் முறைப்படுத்துதல், குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்தல், இல்லங்களில் மேலாண்மை குழு கூட்டம் நடத்துவதை உறுதி செய்தல், இல்ல சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் இளைஞர் நீதிச்சட்டம் 2015-ன் கீழ் பதிவு பெறாமல் எந்தவொரு உரிய அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு குழந்தைகள் பெயரில் நன்கொடை வசூலிக்கும் தனிநபர்கள், இல்லங்கள் மற்றும் டிரஸ்ட் போன்ற அமைப்புகளின் மீதும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, நன்கொடை வழங்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தாங்கள் நன்கொடை வழங்கும் இல்லங்கள் மற்றும் டிரஸ்ட் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னர் வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பான தகவல்களும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை dcpschennai2@gmail.com, mailto:dcpschennai2@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 9940631098, 044-25952450 என்ற தொலைபேசி மூலம் தொடர்வு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in