

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பார்வையிட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் கிட்டங்கி அமைந்துள்ளது. இங்கு மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக இருப்பிலுள்ள இயந்திரங்களில் பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்களை, பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ ஆகியோர் இன்று பார்வையிட்டனர். அப்போது ஆட்சியர் சங்கர் லால் குமாவத், வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், ராமநாதபுரம் வட்டாட்சியர் முருகேசன், தேர்தல் வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். முன்னதாக கிட்டங்கி வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையர் மரக்கன்றுகளை நட்டார்.
அதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி ஆகியோர் ராமேசுவரம் சென்றனர். ஆட்சியர் சங்கர் லால் குமாவத் கூறும்போது: "மின்னனு வாக்குப்பதிவு பாதுகாக்கும் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள 2528 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 7, 1652 கட்டுப்பாட்டு இயந்திரங்களில் 2, 1685 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்களில் 34 என மொத்தம் 43 இயந்திரங்கள் பழுதடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் 36 இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளத. மொத்தம் பழுதைடைந்த 79 இயந்திரங்கள் மற்றும் 1367 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பணி நடக்கிறது" என்று ஆட்சியர் சங்கர் லால் கூறியுள்ளார்.