புதுச்சேரியில் வலுக்கும் போராட்டம்: ஜூலை 1- முதல் ‘நோ ரீடிங்’ - மின்துறை ஊழியர்கள் முடிவு

புதுச்சேரியில் வலுக்கும் போராட்டம்: ஜூலை 1- முதல் ‘நோ ரீடிங்’ - மின்துறை ஊழியர்கள் முடிவு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமத்துக்கு எதிரான போராட்டத்தை மின்துறை ஊழியர்கள் வலுப்படுத்த முடிவு எடுத்துள்ளனர். அதன்படி வரும் ஜூலை 1ம் தேதி முதல் வீட்டு மின் மீட்டர் கணக்கெடுப்பை நிறுத்த ஊழியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார்மயமாக்க அமைச்சரவையில் முடிவெடுத்து மத்திய அரசுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தனியார்மயத்தை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 8-ம் தேதி முதல் மண்டலம் வாரியாக மின்துறை ஊழியர்கள் தலைமை அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 5 நாட்கள் தொடர்ந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று முடிவடைந்தது.

இந்த நிலையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து மின்துறை பொறியாளர் மற்றும் தொழிலாளர் தனியார்மயம் எதிர்ப்பு போராட்டக்குழு பொதுச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில், போராட்டத்தை இன்று முதல் மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பொதுச்செயலர் வேல்முருகன் கூறும்போது, "வரும் ஜூலை 1ம் தேதி முதல் வீடு உள்ளிட்ட ஒட்டுமொத்த அனைத்து மின் இணைப்புகளின் மீட்டர் கணக்கெடுப்பு செய்வதில்லை என முடிவு எடுத்துள்ளோம். புதிய மின் இணைப்பு கொடுக்கமாட்டோம். பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை தொடர்ந்து வழங்குவோம்.

அலுவலக வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து அனைத்து பொறியாளர்களும் வெளியேற வேண்டும். அரசு அளித்த செல்போன் சிம்களை திருப்பி அளிக்க உள்ளோம். பில் கலெக்டர்கள் பில் போடக்கூடாது என முடிவு எடுத்து உடன் செயல்படுத்த தொடங்கியுள்ளோம்" என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in