Published : 16 Jun 2022 02:31 PM
Last Updated : 16 Jun 2022 02:31 PM

மின்துறை விவகாரம் | “புதுச்சேரி மக்கள் சோதனை எலிகள் அல்ல” - போராட்டத்தில் காங். காட்டம்

காரைக்காலில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர்

காரைக்கால்: “என்.ஆர்.காங்கிரஸும், அதிமுகவும் பாஜகவின் கைப்பாவைகளாக உள்ளன” என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறியுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து தனியார்மய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு மின்துறை ஊழியர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய பாஜக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு துணைபோகும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், காரைக்காலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று (ஜூன் 16) மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தமீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ப.மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் குழு மாநில செயலாளர் அரசு. வணங்காமுடி, முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறியது: ''கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அரசு சொத்துகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள், 3 ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட மின்துறையை தனியாருக்கு கொடுப்பதற்கான அனுமதியை புதுச்சேரி பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் அரசு கொடுத்துள்ளது.

மாநிலக் கட்சிகளான என்.ஆர்.காங்கிரசும், அதிமுகவும் பாஜகவின் கைப்பாவைகளாக உள்ளன. புதுச்சேரி மக்கள் சோதனை எலிகள் அல்ல. அரசின் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் மிகப்பெரும் போராட்டங்களை செய்வார்கள்'' என்றார்.

இது குறித்து எம்.எல்.ஏ நாஜிம் கூறியது: ''மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிரான முடிவை புதுச்சேரி அரசு எடுத்துள்ளது. புதுச்சேரியில் மின்துறையை ஏன் தனியார்மயமாக்கக் கூடாது என்பது குறித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, துணை நிலை ஆளுநருக்கு மிகத் தெளிவாக அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் இதையெல்லாம் மீறி அடாவடித்தனமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது மின்துறை ஊழியர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பெரிய அளவில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போகப்போகத் தெரியும். பாஜகவின் அஜண்டா அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெளியே தெரிய வரும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x