Published : 16 Jun 2022 02:26 PM
Last Updated : 16 Jun 2022 02:26 PM
மதுரை: “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கும் வரை ஆளும் திமுகவினரால் ஊழல் செய்ய முடியாது” என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் முரளிதரன் பேசியது: "பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் தனி மரியாதை வைத்துள்ளனர். பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழக மக்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தின் உயர்ந்த பண்பாட்டையும், பழமையான தமிழ் மொழியையும் பிரதமர் மதித்து வருகிறார். மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியால் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
இலங்கை தமிழர்கள் மீது மோடி அரசு அக்கறையுடன் உள்ளார். இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஆயுதப் போர் உருவாகும் சூழலில் இலங்கைக்கு உதவியவர் மோடி. இலங்கை தமிழர்களுக்கு மோடி அதிகம் செய்துள்ளார். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 2971 மீனவர்களை பத்திரமாக மீட்டு வந்தவர் மோடி. தற்போது இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை. 8 ஆண்டுகளில் 70 ஆயிரம் புதிய தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
கரோனா போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. திமுகவினர் அவர்களின் குடும்பத்தினருக்காக மட்டுமே உழைக்கின்றனர். அண்ணாமலை இருக்கும் வரை ஊழல் செய்ய முடியாது. இதனால் 70 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியுள்ளனர்.
அண்ணாமலை ஐஏஎஸ் அதிகாரிகளை நம்பி அரசியல் செய்யவில்லை. சாதாரண மக்களை நம்பி அரசியல் செய்கி்றார். திமுக போன்ற ஊழல் கட்சிகள் இருக்கும் வரை இந்தியா முன்னேறாது. அனைத்திலும் கமிஷன் வாங்கும் கட்சித் தலைவர்களை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. இதனால் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். ஊழல் திமுக அரசை அகற்றிவிட்டு பாஜக அரசு அமைய தமிழக மக்கள் அனைவரும் பாடுபட வேண்டும்" என்று முரளிதரன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT