“காய்ச்சல், சளி அறிகுறி... அலட்சியம் வேண்டாம்” - தஞ்சை சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

“காய்ச்சல், சளி அறிகுறி... அலட்சியம் வேண்டாம்” - தஞ்சை சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: "பொதுமக்கள் காய்ச்சல், சளிக்கான அறிகுறி அல்லது தொண்டை தொடர்பான பிரச்சினைகள் போன்ற உடலில் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் தயாராக உள்ள கரோனா நோய் தடுப்பு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தால், நிச்சயம் 3-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியம். 3 தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்கள் இந்த கரோனா பாதிப்புகளில் இருந்து நிச்சயம் மீளலாம். உலகமே இதற்கு சாட்சியாக இருந்துகொண்டிருக்கிறது.

உலக முழுக்க இன்று அனைத்து நாடுகளிலும், 30 ஆயிரத்திற்கும் அதிகமாக, 1 லட்சத்திற்கும் அதிகமாக என்ற நிலையில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த நிலையில் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தடுப்பூசி மட்டும்தான் தீர்வு. அதேபோல் தற்காப்பு நடவடிக்கைகளாக இருக்கும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று தஞ்சாவூரில் ஏற்பட்டுள்ள இழப்பு, ஒரு 18 வயது பெண். அவருக்கு ஏற்கெனவே கடந்த இரண்டு மூன்று நாட்களாக கூடுதலாக காய்ச்சல் இருந்தும் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே, பொதுமக்களுக்கு அரசின் வேண்டுகோள், காய்ச்சல், சளிக்கான அறிகுறி, அல்லது தொண்டை தொடர்பான பிரச்சினைகள் இதுபோன்ற புதிதாக உடலில் மாற்றம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற வேண்டும்.

சில நாட்களில் சரியாகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து தப்புக்கணக்கு போட வேண்டாம். தஞ்சையில் அப்படிதான் அந்த பெண், வீட்டிலேயே இருந்து, பின்னர் தனியார் மருத்துவமனை சென்று இறுதியாக அரசு மருத்துவமனை வந்து உயிரிழந்துள்ளார். உடலில் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in