Published : 16 Jun 2022 01:18 PM
Last Updated : 16 Jun 2022 01:18 PM

அடுத்த தலைமுறையைக் காக்கும் சுற்றுச்சூழல் கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும்: மநீம

சென்னை: “நீடித்த வளர்ச்சிக்கான சுற்றுச்சூழல் கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி துணைத் தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுச்சூழல் தொடர்பாக சமீபத்தில் வெளியான இரு அறிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன. யேல், கொலம்பியா பல்கலைக்கழகங்கள் இணைந்து அண்மையில் வெளியிட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு-2022 (Environmental Performance Index) அறிக்கையில், 180 நாடுகளின் வரிசையில் இந்தியா கடைசி நாடாக இடம் பெற்றிருக்கிறது.

காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிவிக்கிறது. மத்திய அரசானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 வெளியிடப்பட்டபோதும் அது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

தலைமுறைகள் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மத்திய, மாநில அளவில் அமைச்சகங்கள், அமைச்சர்கள் இருந்தும் இந்த நிலையில் நமது நாடு இருப்பது வேதனைக்குரியது.

இனிமேலாவது சூழலியல் ஆர்வலர்கள், துறைசார் வல்லுனர்கள், சமூக அக்கறையுள்ள தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதனடிப்படையில் நீடித்த வளர்ச்சிக்கான சுற்றுச்சூழல் கொள்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

சூழல் காப்போம். அடுத்த தலைமுறையின் நல்வாழ்விற்காக இன்றே திட்டமிடுவோம்" என்று தங்கவேலு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x