

சென்னை: "தமிழக காவல்துறையில் 20 ஆயிரத்து 521 பெண் காவலர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு மட்டும், 75 ஆயிரத்து 464 மனுக்கள் மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்டுள்ளன. இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் சுமூகமாக பேசிமுடித்து வைக்கப்பட்டுள்ளன" என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, இன்று (ஜூன் 16) திறந்து வைத்தார்.
இதன் பின்னர் பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு "மகளிரை காவலர்களாக 1973-ம் ஆண்டு நியமித்ததோடு மட்டுமில்லாமல், மகளிரை சென்னை மாநகர காவல் ஆணையராகவும், தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராகவும் நியமித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
தமிழக காவல்துறையில் இன்று 20 ஆயிரத்து 521 பெண் காவலர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். பெண் காவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு மட்டும், 75 ஆயிரத்து 464 மனுக்கள் மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்டுள்ளன. இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை சுமூகமாக பேசிமுடித்து கணவன் மனைவி பிரச்சினைகள் தீர்த்துவைத்து, அவர்களது குடும்பங்களில் மகிழ்ச்சியை மகளிர் காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
ஒரே ஒரு குறை இருந்தது. தமிழகத்தில் 20 உட்கோட்டங்களில் மகளிர் காவல் நிலையங்கள் இல்லை என்ற குறை இருந்துவந்தது. அந்த குறையையும் தமிழக முதல்வர் இன்று தீர்த்துவைத்து, 20 கோட்டங்களிலும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்க ஆணை பிறப்பித்து, இன்று திறந்துவைத்துள்ளார். இதற்காக தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.