

சென்னை: பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட முயற்சிகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்திய சிறப்பாக செயலாற்றிய இந்த 3 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதன்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தங்கப் பதக்கமும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, வெள்ளிப் பதக்கமும், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினார்.