Published : 16 Jun 2022 10:36 AM
Last Updated : 16 Jun 2022 10:36 AM

மேகதாது | அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கான திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: மேகதாது அணைக்கு காவிரி ஆணையக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டால், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தெளிவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக அரசு பல்வேறு வழிகளில் தெரிவித்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், நடைபெற உள்ள கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதிக்கும் முடிவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதியாக இருப்பது கவலையளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான சூழ்ச்சியாகவே இந்த நடவடிக்கை தோன்றுகிறது.

மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் தொடக்கம் முதலே ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் கடந்த சில வாரங்களாக நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே நாடகத்தனமாகவே தோன்றுகின்றன. 2019ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை குறித்த விவாதம் தொடர்ந்து இடம் பெற்று வந்தது. தமிழகத்தை சேர்ந்த பாமக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பாலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாலும் அந்த முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்தது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள காவிரி ஆணையம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இப்போது மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியிருப்பதாகக் கூறி, நடைபெறவிருக்கும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப் போவதாக அறிவித்தது தான் தமிழகத்திற்கு எதிரான சூழ்ச்சியின் முதல் அத்தியாயம் ஆகும். இவ்வாறு நம்புவதற்கு ஏராளமான சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன.

காவிரி ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தமிழகத்திலிருந்து முதல் குரலை எழுப்பியது பாமக தான். இந்த விஷயத்தில் பாமக-வின் குரலையே தமிழக அரசும் எதிரொலித்தது. மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கான அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை என்பதை விளக்கி ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது; உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பாக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. மேகதாது அணை விவகாரத்தை நேர்மையுடன் அணுக வேண்டும் என்ற எண்ணம் காவிரி ஆணையத்திற்கு இருந்திருந்தால், இது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை காத்திருந்திருக்க வேண்டும். ஆனால், காவிரி ஆணையம் அதை செய்யவில்லை.

மாறாக, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் கர்நாடக அரசை விட, காவிரி ஆணையம் தான் அதிக தீவிரத்தையும், அவசரத்தையும் காட்டுகிறது. நடைபெறவுள்ள காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதை தவிர்க்கும்படி மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு ஆணையிடக் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் கூட, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்தே தீருவோம் என்று காவிரி ஆணையம் பிடிவாதம் பிடிப்பதன் நோக்கம், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு எப்படியாவது அனுமதி அளித்தாக வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

கர்நாடக அரசியலில் காவிரி விவகாரம் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான். கர்நாடகத்தில் அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவிருப்பது, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து முழங்கி வருவது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கும்? என்பதை யூகிக்க முடியும். மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்தால், அதனடிப்படையில் புதிய அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் பலமுறை கூறியிருக்கிறார்.

அதையும், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் காவிரி ஆணையம் காட்டும் ஆர்வத்தையும் வைத்துப் பார்க்கும் போது, இந்த விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பதை எளிதில் கணிக்க முடியும். இதை உணர்ந்து இந்த விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். ஆணையத்தில் அங்கம் வகிக்கும் பிற காவிரி பாசன மாநிலங்களான கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டி கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விவாதத்தை தடுக்க வேண்டும்; விவாதம் நடத்தப்பட்டாலும் கூட, மேகதாது அணைக்கு அனுமதியளிக்கும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு இல்லை என்பதை சான்றுகளுடன் எடுத்துக் கூறி புதிய அணைக்கு அனுமதி அளிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த முயற்சிகள் அனைத்தையும் கடந்து மேகதாது அணைக்கு காவிரி ஆணையக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டால், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தெளிவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும். தமிழகத்திற்கு சோறு படைக்கும் காவிரி பாசன மாவட்டங்கள் வறண்டு விடாமல் இருப்பதையும், அங்குள்ள விவசாயிகள் வாடி விடாமல் இருப்பதையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x