Published : 16 Jun 2022 04:41 AM
Last Updated : 16 Jun 2022 04:41 AM
சென்னை: சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 2,500-ல் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், பொதுசுகாதார குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
கரோனா தொற்று கடந்த சிலநாட்களாக அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் தமிழகத்தில் 332 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 171 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதித்த 1,622 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 781 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 684 பேர் வீட்டுத்தனிமையிலும், 59 பேர் மருத்துவமனைகளிலும், 38 பேர் பிற மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் 3 பேருக்கு மேல் தொற்று பாதித்த 46 தெருக்களும், 5 பேருக்கு மேல் தொற்று பாதித்த 6 தெருக்களும் உள்ளன. இந்தத் தெருக்களில் மாநகராட்சியின் சார்பில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அவர்கள் வெளியில் செல்லாமல் தொற்று பரவுதலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் 2,500 ஆர்டிபிசிஆர் என்ற கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று அதிகரித்து வருவதால் நாளை (இன்று) முதல் தினமும் 5 ஆயிரம் என்ற அளவில் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
4 மண்டலங்களில் தொற்று
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 4 மண்டலங்களில் கரோனா தொற்று சற்று அதிகமாக உள்ளது. இந்தக் கூட்டத்தில், மண்டல நல அலுவலர்கள் தங்களது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மண்டல அளவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, மேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு வட்டாரத்துக்கு ஒரு இடம் என 3 இடங்களில் தலா 50 படுக்கைகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு மையங்கள் தொடங்க மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT