

2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி விருகம்பாக்கம். இங்கு வசதி மிக்க திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களும், ஏழைத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர். மாளிகைகளும், குடிசைகளும் இருக்கும் தொகுதி இது.
விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக மாநில தலைவி தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இவருடன் களத்தில் அதிமுக வேட்பாளராக வி.என்.ரவி, திமுக வேட்பாளராக கே.தனசேகரன், தேமுதிக வேட் பாளராக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.பார்த்த சாரதி, பாமக வேட்பாளர் சி.ஹெச்.ஜெயராவ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் உட்பட 20 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தொகுதிக்குள் ஆசியாவி லேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் அமைந்துள்ளது. ஆனால் அங்கு துப்புரவுப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மிகவும் பழுதடைந்த சாலைகள், சங்கடப்படுத்தும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, அரசுக்கு சொந்தமான இடங்களில் பரவலாக ஆக்கிரமிப்புகள் என பல்வேறு பிரச்சினைகள் தொகுதியில் உள்ளன. கடந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலருக்கு இன்னமும் வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என குறைகளை அடுக்குகின்றனர் இந்த தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள்.
மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த தொகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்கின்றன. விபத்தில் சிக்கியோரைக் காப்பாற்றி உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க தேவையான அரசு மருத்துவமனை இந்த தொகுதியில் இல்லை. எனவே தொகுதிக்குள் அவசர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
சிவன் பூங்கா பகுதியில் தனக்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த பாஜக வேட்பாளர் தமிழிசை ‘தி இந்து’விடம் தெரிவித்தபோது, “சாலை போக்குவரத்து, திரைப்பட தொழிலாளர் பிரச்சினைகள் உள்ளன. நான் அந்த துறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரை அழைத்து வந்து அந்த பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன் என்று தொகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளேன்'' என்றார்.
திமுக வேட்பாளர் கே.தனசேகரன் சிவன் பூங்கா பகுதியில் வாக்கு சேகரித்தார். அவர் கூறும்போது, “நான் எனது தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலம் கடன் கிடைக்க உதவியிருக்கிறேன். மேலும், அறக்கட்டளை அமைத்து நூற்றுக்கணக்கானோருக்கு இறுதிச் சடங்குகளுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் இலவசமாக செய்துள்ளேன். மக்கள் பிரச்சினைகளில் பாகுபாடு பார்க்காமல் பங்கேற்று தீர்த்து வைப்பேன். இதனால் எனக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது” என்றார்.
விருகம்பாக்கம் மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதிமுக வேட்பாளர் வி.என்.ரவி கூறும்போது, “வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த தொகுதி மக்களுக்கு கிடைத்துள்ளது. அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்” என்றார்.
எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த தேமுதிக வேட்பாளர் பி.பார்த்தசாரதி, தெரிவித்த போது,
“இத்தொகுதியில் பலருக்கு வீட்டுமனைப் பட்டா இல்லை. அவர்களுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
இவர்களைத் தவிர, பாமக வேட்பாளர் சி.ஹெச்.ஜெயராவ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் ஆ.சீனிவாசன் ஆகியோரும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட் படுத்தாமல் வீடு வீடாக ஏறி இறங்கி பரபரப்பாக வாக்கு சேகரித்துக் கொண்டிருக் கின்றனர்.