

அடுக்குமாடி கட்டிட விபத்து இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னையை அடுத்த போரூருக்கு அருகில் உள்ள மவுலிவாக்கம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 28 ஆம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக வந்த தகவலும் கவலை அளிக்கிறது. அவர்கள் அனைவரும் வெகுவிரைவில் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு இடி தாக்கியது தான் காரணம் என்று கட்டுமான நிறுவனத்தின் சார்பிலும், வேறு காரணங்கள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பிலும் கூறப்படுகிறது. உண்மையில் 11 மாடிக் கட்டடம் கட்ட அனுமதி அளித்த அரசு அதிகாரிகள், தரமில்லாத பொருட்களைக் கொண்டு கட்டிடம் கட்டிய கட்டுமான நிறுவனம் என இருதரப்பிலும் தவறு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போரூர் மவுலிவாக்கம் பகுதியில் இதுவரை 5 மாடிகளுக்கும் அதிக உயரம் கொண்ட கட்டடங்களைக் கட்ட அனுமதி அளிக்கப்படாத நிலையில், மணற்பாங்கான இடத்தில் மண் பரிசோதனை உள்ளிட்ட எந்த ஆய்வும் நடத்தாமல் 11 மாடி குடியிருப்புக் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எந்த அடிப்படையில் அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை.
கட்டுமான பணியிலும் பல குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன. கட்டிடத்தின் வடிவமைப்புப் பொறியாளருக்கும், களத்தில் பணியாற்றிய பொறியாளர்களுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை; வடிவமைப்பு பொறியாளரின் அறிவுரைகளை கட்டுமான அதிபர் பொருட்படுத்தாமல் அனுபவம் இல்லாத பொறியாளர்களைக் கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இரு தரப்பினரின் பொறுப்பற்ற செயலால் 13 பேர் தங்களின் விலை மதிப்பில்லாத உயிரை இழந்திருப்பதுடன், ஏராளமானோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். விபத்துக்கான காரணங்களைக் கண்டுபிடித்து இனியும் இப்படி ஒரு விபத்து நடக்காத வண்ணம் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். விபத்துக்குக் காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் தமிழக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு போதுமானதல்ல:
அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறார். இந்த இழப்பீடு போதுமானதல்ல. ஆந்திராவில் எரிவாயுக் குழாய் வெடித்து உயிரிழந்துள்ள 19 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதில் ரூ.20 லட்சம் கெயில் நிறுவனத்தின் பங்கு ஆகும். அதுமட்டுமின்றி, மவுலிவாக்கம் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆனால், தமிழக அரசு மட்டும் இந்த விபத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் மிகக்குறைந்த இழப்பீட்டை வழங்கியிருப்பது முறையல்ல. ஆந்திர அரசைப் போலவே, விபத்துக்குக் காரணமான கட்டுமான நிறுவனத்திடமிருந்து தலா ரூ.10 லட்சம், அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் என ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.