Published : 20 May 2016 02:58 PM
Last Updated : 20 May 2016 02:58 PM

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை

அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக போட்டியிட்ட 234 தொகுதிகளில், 134-ல் வெற்றி பெற்று, 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இது கடந்த 1984-க்குப் பின் அதிமுகவுக்கு கிடைத்த இரட்டை வெற்றியாகும்.

வெற்றி பெற்றதை தொடர்ந்து பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா 20-ம் தேதி மாலை அணிவிப்பதாக அதிமுக அறிவித்தது. இதன்படி நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு போயஸ் தோட்ட வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். அங்கு முதல்வரை, நாடாளுமன்ற துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து புறப்படும்போது, நத்தம் விஸ்வநாதனை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, ‘‘கவலைப்படாதீர்கள்’’ என ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அங்கிருந்து கதீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, வாலாஜா சாலை வழியாக 2 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது முதல்வரை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத் மற்றும் தற்போது வெற்றி பெற்றுள்ள செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

அப்போது, பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த கே.பி.முனுசாமியை அழைத்து பேசி ஆறுதல் கூறினார். இதையடுத்து, அங்கிருந்து முதல்வர் வாகனம், அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்புக்கு சென்றது.

அங்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர். தொடர்ந்து, எம்.ஜி.ஆர். சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டார். அப்போது, கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த ஜே.சி.டி பிரபாகரை அழைத்து ஆறுதல் கூறினார்.

முதல்வரின் ஆறுதல் வார்த்தைகளை கேட்ட, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.

இது தவிர, முதல்வர் சென்ற வழி நெடுகிலும் அதிமுக கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்த இடங்களில் மேளதாளங்களுடன் தொண்டர்கள் வரவேற்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ல் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன், இதேபோல், தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போதும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இம்முறை, வழக்கமான பாதையை மாற்றினர். இருப்பினும், அண்ணா சாலை, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x