Published : 16 Jun 2022 07:52 AM
Last Updated : 16 Jun 2022 07:52 AM

அதிமுக பொதுச் செயலர் பதவியை கைப்பற்ற ஓபிஎஸ், பழனிசாமி தீவிரம்

அதிமுக பொதுச் செயலராக ஓ.பன்னீர்செல்வத்தை அறிவிக்க வலியுறுத்தி சென்னை பசுமைவழிச் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள். படம்: பு.க.பிரவீன்

சென்னை: அதிமுக பொதுச் செயலர் பதவியைக் கைப்பற்ற ஓபிஎஸ், பழனிசாமி ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். இருவரிடமும் கட்சியின் மூத்த தலைவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2017 முதல் இருவரிடையே பனிப்போர் இருந்தாலும், பெரிதாக பிரச்சினை எழவில்லை.

இந்நிலையில், வரும் 23-ம் தேதிஅதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை, மீண்டும்பொதுச் செயலர் பதவி பேச்சு எழுந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் ஒற்றைத்தலைமையை வலியுறுத்தினர்.

இதையடுத்து, பொதுச் செயலர் பதவியைக் கைப்பற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் ஓபிஎஸ், பழனிசாமி ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ அசோக், முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன், எம்.பி. ஆர்.தர்மர், மாவட்டச் செயலர்கள் தேனிமுகமது சையத்கான், நெல்லை கச்சை கணேச ராஜா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

அதேபோல, பழனிசாமியை மூத்த நிர்வாகிகள் தளவாய் சுந்தரம்,பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலர் வெங்கடேஷ்பாபு உள்ளிட்டோர் நேற்று சந்தித்து, ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பழனிசாமியிடம் நேற்று ஆலோசனை நடத்தியமுன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் நேற்று காலை ஓபிஎஸ் இல்லத்துக்கும் வந்து ஆலோசனை நடத்தினர். அவரை சமாதானப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைநடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் ஓபிஎஸ்-க்குபொதுச் செயலர் பதவி வழங்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தார்களாம்.

இதற்கிடையில், நேற்று இரவு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், எம்எல்ஏ மரகதம் குமரவேல், புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலர் ஏ.அன்பழகன் உள்ளிட்டோரும் பழனிசாமியை சந்தித்துள்ளனர். பின்னர் பா.வளர்மதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தொண்டர்கள் எதிர்பார்ப்பது ஒற்றைத் தலைமை.

செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொண்டர்கள் விரும்பும் ஒருவர்தான் தலைமைக்கு வருவார்’’ என்றார்.

இதற்கிடையே, இரு தரப்பு சார்பிலும் சென்னை பசுமை வழிச் சாலை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பசுமை வழிச் சாலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரை பழனிசாமி ஆதரவாளர்கள் கிழித்ததாகக் கூறி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இன்றும் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதிகாக்க வேண்டும்: ஓபிஎஸ்

இதற்கிடையில், சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன் நேற்று காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு, கோஷமெழுப்பி வந்தனர். நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே வந்த ஓபிஎஸ், தொண்டர்களை சந்தித்தார்.

அப்போது ‘‘அதிமுகவின் ஒற்றைத் தலைமை ஓபிஎஸ்;துரோகிகளிடம் கட்சியை ஒப்படைக்காதீர்கள்’’ என தொண்டர்கள் கோஷமெழுப்பினர். அப்போது, ‘‘அதிமுக தொண்டர்கள் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஓபிஎஸ் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x