யார் வழக்கு தொடுத்தாலும் பின்வாங்க மாட்டோம்: அண்ணாமலை உறுதி

தஞ்சாவூரில் நேற்று ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்த விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூரில் நேற்று ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்த விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.படம்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: யார் வழக்கு தொடுத்தாலும் பின்வாங்க மாட்டோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சாவூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி கணேசன் தலைமை வகித்தார்.

இதில், பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த கோவை வி.பாலசந்தர் விஸ்வநாதன், பெரம்பலூர் எஸ்பி.சண்முகதேவன், விருதுநகர் எஸ்.கே.சக்திவேல், திருவாரூர் டி.முருகானந்தம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய செயலாளர்கள் உட்பட சுமார் 2 ஆயிரம் பேர் பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: திமுக அரசு மீது பாஜக வைத்த குற்றச்சாட்டிலிருந்து பின் வாங்காமல், இன்னும் ஒரு படி முன்னால்தான் போகிறோம். தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டக ஒப்பந்த விவகாரத்தில் நாங்கள் வெளியிட்ட ஆவணத்துக்கு பதில் அளிக்க வேண்டும். தொழில்நுட்பக் குழு ஆவின் பெயரை பரிந்துரை செய்ததா? இல்லையா? என்பதற்கு இதுவரை பதில் இல்லை.

என் மீது நிறைய வழக்கு தொடரப்பட்டு வருகிறது. மின்சாரத் துறை அமைச்சர் ரூ. 10 கோடிக்கு என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுவரை ரூ. 620 கோடி அளவுக்கு என் மீது தமிழகத்தில் வழக்குகள் உள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் என் மீது வழக்குத் தொடுத்தாலும் பயப்பட மாட்டேன். நாங்கள் ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளோம். யார் வழக்குத் தொடுத்தாலும், மிரட்டினாலும் பின்வாங்க மாட்டோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in