Published : 16 Jun 2022 07:15 AM
Last Updated : 16 Jun 2022 07:15 AM
சென்னை: வரும் மழைக் காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக, 3.37 லட்சம் சிறப்பு பராமரிப்பு பணிகள் ஒரு மாதத்துக்குள் மேற்கொள்ளப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோடைக்காலத்தில் மின்விநியோகம் குறித்தும், வரும் மழைக் காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், புதிதாக அறிவிக்கப்பட்ட 316 துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வது, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் இலவச விவசாய மின்இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்துவது, தொழிற்சாலைகளுக்கு விரைவாக மின்இணைப்பு வழங்குவது ஆகியன குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட உள்ள 316 துணைமின் நிலையங்களில் 271 துணைமின் நிலையங்களுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு 174 துணைமின் நிலையங்கள் டெண்டர் கோருவதற்கு தயார் நிலையில் உள்ளன. எஞ்சிய 45 துணைமின் நிலையங்களை அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் 13.32 லட்சம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், பழுதடைந்த 27,821 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 79,407 இடங்களில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன.
மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டிய 1.34 லட்சம் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல், பழுதடைந்த மாற்றப்பட வேண்டிய 20 ஆயிரம் மின்கம்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுபோன்று மொத்தமாக 3.37 லட்சம் பராமரிப்பு பணிகளை சிறப்பு பராமரிப்பு பணிகளாக மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் அதாவது, வரும் ஜுலை 15-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலை 3-ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 800 மெகாவாட் மின்னுற்பத்தி தொடங்கப்படும். எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டத்தில் உள்ள இரண்டு அலகுகளில் 1,320 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட உள்ளது. இதில், 2024 மார்ச் மாதத்தில் 660 மெகாவாட்டும், ஜுன் மாதம் 660 மெகாவாட்டும் மின்னுற்பத்தி தொடங்கப்படும்.
நிலக்கரி தட்டுப்பாடு இருந்த நிலையிலும் தமிழகத்தில் சீரான மின்விநியோகம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ஒரு அரசியல் கட்சித் தலைவர் தவறான தகவல்களை கூறி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 143 டாலர் விலையில்4.80 லட்சம் டன் நிலக்கரி வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதே நிலக்கரியை 184 மற்றும் 187 டாலருக்கு சில மாநிலங்கள் வாங்கியுள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் தான் குறைந்த விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT