

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், நடைபாதை மேம்பாலத்தை தவிர்த்து ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒப்பதவாடி ஊராட்சிக்கு உட்பட்ட அங்கிநாயனப்பள்ளி கிராமத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி, கிருஷ்ணகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரி, பர்கூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், கடந்த காலங்களில் மாணவிகள் சாலையைக் கடக்கும் போது விபத்துகளில் சிக்கி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில் நடை பாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நடைப்பாதை மேம்பாலத்தின் மீது ஏறி நடந்து சென்று, தேசிய நெடுஞ்சாலையை கடக்காமல், ஆபத்தான முறையில் சில மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது மாணவிகளின் நலன் கருதி, தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், கல்லூரிக்குள் குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில், மாணவிகள் ஆபத்தை அறியாமல் நடைபாதை மீது செல்லாமல், சாலையை கடந்து செல்கின்றனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையை கடக்க, நடைபாதை மேம்பாலத்தை பயன்படுத்த உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.