

புதுடெல்லி/சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக பதியப்பட்ட வழக்கில், அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதற்கிடையே அவரைதமிழக போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி விசாரணை நடைபெறும் மாவட்ட காவல் எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது என்றும், தனது பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி 12-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த மனுவில், "வரும் ஜூன்22-ம் தேதிமுதல் ஜூன் 25-ம் தேதிவரை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் பங்கேற்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அந்தக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, எனது ஜாமீன் நிபந்தனைகளை 5 நாட்களுக்கு தளர்த்த வேண்டும்" என்று கோரிய்ிருந்தார்.
இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை அவசர வழக்காககருதி விசாரிக்க முடியாது எனக்கூறி ராஜேந்திர பாலாஜியின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர்.