

பொன்னேரி: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம், தொழிலாளிகள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த அனல்மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளின் 5 அலகுகளில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு, நிலக்கரி கையாளுதல், கன்வேயர் பெல்ட் தூய்மைபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், அனல்மின் நிலையத்தின் 2-வது நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராம் சிங்(24), கடந்த இரு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் நிலக்கரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், பரசுராம் சிங் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை மின்நிலையத்தின் 2-வது நிலையில், நிலக்கரி கன்வேயர் பெல்டில் நிலக்கரி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக 30 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து, படுகாயமடைந்தார்.
இதையடுத்து, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், பரசுராம் சிங், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.