Published : 16 Jun 2022 07:17 AM
Last Updated : 16 Jun 2022 07:17 AM

தூர்வாரும் பணியை தடையின்றி தொடர மதுராந்தகம் ஏரி நீர் பல்லவன்குளம் ஏரியில் சேமிப்பு: வழித்தடங்களை உருவாக்கும் பணியில் நீர்வள ஆதாரத் துறை தீவிரம்

மதுராந்தகம் அருகே பல்லவன்குளம் ஏரியை பார்வையிடும் அதிகாரிகள்.

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியை தூர் வாருவதற்கு வசதியாக தற்போது ஏரியில் இருக்கும் நீரை செய்யூர் அருகே உள்ள பல்லவன்குளம் ஏரிக்கு கொண்டு சென்று சேமிக்க வழித்தடங்கள் உருவாக்கும் பணியில் நீர்வளஆதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 2,411 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இந்த ஏரியின் மூலம் 7,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி தூர் வாரப்பட்டது. தற்போது ஏரியில் ஆறிலிருந்து ஏழு அடி வரை மண் சேர்ந்து உள்ளதால் மழை நீரை சேமிக்க முடியாமல் அனைத்தும் கலங்கள் வழியாக உபரி நீராக கிலியாற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது.

இதனால் ஏரியை தூர்வாரக் கோரி விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர், முதல்வருக்கும் மனுவும் அளித்தனர். இந்த நிலையில் ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 6-ம் தேதி முதல் மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக கரைகள் பலப்படுத்துதல் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏரியில் பாதி அளவு நீர் இருப்பு உள்ளது. இதனை வீணாக்காமல் சேமிக்கும் நடவடிக்கையில் நீர்வள ஆதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி மதுராந்தகம் ஏரியில் இருந்து நேரடியாக செய்யூர் அருகே உள்ள பல்லவன்குளம் ஏரிக்கு நீரை கொண்டு சென்று சேமிக்க வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்ற நீர்வள ஆதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து துறை அதிகாரி கள் கூறியதாவது: மதுராந்தகம் ஏரி தூர்வாரி முடிப்பதற்கு 2 ஆண்டு ஆகும். இதனால் ஒரு போகம் மட்டுமே விளைவிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தண்ணீருக்கு மாற்று வழியை ஏற்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கே.கே.புதூர் அணைக்கட்டுக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அணை நிரம்பியவுடன் இங்கிருந்து பல்லவன் குளம் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே ஏரியிலிருந்து தண்ணீர் வீணாகாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x