Published : 16 Jun 2022 06:30 AM
Last Updated : 16 Jun 2022 06:30 AM

மேகேதாட்டு அணை விவகாரம்; காவிரி மேலாண்மை ஆணையம் திட்டமிட்டபடி முற்றுகை: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில், திட்டமிட்டபடி இன்று டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கொடுத்த அனுமதியின் பேரில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கையை கர்நாடகம் சட்ட விரோதமாக தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைத்து வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேகேதாட்டு அணை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இதனை ஏற்கக் கூடாது. மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜூன் 16-ம் தேதி (இன்று) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தாரை தொடர்பு கொண்டு, “போராட்டத்தின் முடிவில் தங்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க நேரம் ஒதுக்கித் தர வேண்டும்” என்று அனுமதி கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், ஜூன் 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட உள்ளதாகவும், மேலும் தான் கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு ஜூன் 16, 17 ஆகிய நாட்களில் நேரில் சென்று காவிரிப் பாசன பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் திட்டமிட்டபடி ஜூன் 16 காலை 11 மணிக்கு டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள சேவா பவன் காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x