Last Updated : 16 Jun, 2022 07:40 AM

 

Published : 16 Jun 2022 07:40 AM
Last Updated : 16 Jun 2022 07:40 AM

குற்றப் பின்னணியை உடனடியாக தெரிந்துகொள்ள கைதிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் முறை: தமிழக சிறைகளில் விரைவில் அறிமுகம்

சென்னை: சிறைக்கு வரும் கைதிகளின் விவரம், பின்னணியை சிறை அதிகாரிகள் உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் தமிழக சிறைகளில் விரைவில் கைவிரல் ரேகை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட பல்வேறு வகையான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்கள் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என வகைப்படுத்தி தனித்தனியாக அடைக்கப்படுகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்களுக்கான தனிச் சிறைகள், 4 மாவட்ட சிறைகள், 100 ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 9 பெண்களுக்கான கிளைச் சிறைகள், 3 ஆண்களுக்கான தனிச் சிறைகள், 3 பெண்களுக்கான தனிக் கிளைச் சிறைகள் உள்ளன.

மேலும், இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப் பள்ளி, திறந்தவெளி சிறை, பண்ணைச் சிறை ஆகியவை தலா ஒன்று உள்ளன. மொத்தத்தில் தமிழக சிறைத் துறை நிர்வாகத்தின் கீழ் (2008-2009) 134 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர்.

கொடிய குற்றச் செயல், பயங்கரவாதம், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டு குற்றவாளிகள், தூக்குத் தண்டனை கைதிகள், ஆயுள் தண்டனைக் கைதிகள் என அத்தனை பேரும் சிறைத் துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்ற வழக்குகளில் சிக்கும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் பல்வேறு சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.

இதனால், ஒரு குற்றவாளியின் பின்னணி குற்ற நிலவரங்கள் சிறைத் துறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிய வாய்ப்பு இல்லை. இதற்குத் தீர்வு காணும் வகையில் கைதிகளுக்கு, தமிழக சிறைகளில் கைவிரல் ரேகை (Finger print) பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறைத் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, “ஒருவரின் உருவத் தோற்றத்தை வைத்து அவரின் குற்றப் பின்னணியை கணித்து விட இயலாது. எனவே, தொழில்நுட்பம் மூலம் கைதிகளின் விவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிவு செய்துள்ளோம்.

இப்படி தெரிந்துகொள்வதன் மூலம் சிறைளில் மோதல் உட்பட பல்வேறு வகையான அசம்பாவிதங்களை முன் கூட்டியே கணித்து தடுத்து விட முடியும். இதற்காக தமிழக சிறைகளில் கைவிரல் ரேகை பதிவு முறையை விரைவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, குற்ற வழக்குகளில் சிக்கி சிறைக்கு வரும் குற்றவாளிகள், அவர்களது கைவிரல் ரேகையை பதிவிட்டால் போதும். உடனே சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி, வயது, குற்றப் பின்னணி உட்பட அனைத்து விவரங்களும், எத்தனை முறை சிறை சென்றுள்ளார் என்ற விவரமும் தெரிந்து விடும்.

இதன் மூலம் சிறைத் துறை அதிகாரிகள் கைதியின் விவரத்தை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். எந்தெந்த பகுதிகளில் இவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்றும் அறிந்துகொள்ள முடியும்.

மேலும், கைதிகள் வெளியே செல்லும்போது ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. எனவே, தமிழக சிறைகளில் கைவிரல் ரேகை பதிவு முறையை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x