Last Updated : 09 May, 2016 08:46 AM

 

Published : 09 May 2016 08:46 AM
Last Updated : 09 May 2016 08:46 AM

என்ன செய்யலாம் இந்த வாக்குரிமையை?

ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று வாக்காளர்களை சந்தித்து, தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், வாக்களிப்பதன் அவசியத்தையும் உணர்த்து வதற்காக சென்ற வாரத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் குழு ஒன்றுடன் இணைந்து நானும் சென்றிருந்தேன். மக்கள் தேர்தல் குறித்து என்ன நினைக் கிறார்கள் எனத் தெரிந்துகொள்ளும் எண் ணத்தில்தான் நான் சென்றேன். படித் தவர்கள், வசதியானவர்கள்தான் வாக்களிக்க வருவதில்லை என்பதால் அப்படிப்பட்டவர் களைத் தேடித் தேடி சந்தித்தோம்.

“ஊழல்வாதிகளையும், கொள்ளைக் காரர்களையும், மக்களைப் பற்றி அக்கறை யில்லாதவர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் வேலையையெல்லாம் போட்டு விட்டு வரிசையில் வெயிலில் நின்று காத்துக் கிடக்க வேண்டுமா?” என்று சொன்னவர் களே அதிகம். ‘‘நாங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அப்படிப்பட்டவர் கள்தான் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக் கப்படுவார்கள் எனும்போது இந்த வாக் குரிமை எங்களுக்குப் பயன்படாத ஒன்று’’ என்று முகத்தில் அறைந்தது போல் சொன்னார்கள்.

தேர்தலை மதிக்கும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுபவர்களைத்தான் பிடிக்கவில்லை. அதனால்தான் கால்கடுக்க வரிசையில் நின்று இறுதியில் ‘நோட்டா’ பொத்தானை அழுத்தி விடுகின்றனர். நோட்டாவுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் குப்பையில் போடப்படுகின்ற வாக்குகளுக்கு சமம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இம்முறை தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை நடத்திக் காட்டிட கோடிக்கணக்கில் விளம்பரம் செய் வதைப் பார்க்கிறோம். நம்முடைய வாக்கு ஒரு நேர்மையான உறுப்பினரை தேர்வு செய்யப்போகிறது எனும் உத்தரவாதத் தையும் நம்பிக்கையையும் கொடுத்தால் நிச்சயம் அனைவருமே வாக்களிப்பார்கள்.

பலமுறை அந்த நம்பிக்கை பொய்த்து விட்டதன் காரணமாக சலிப்புடன் வாக் களிக்கிறார்கள். அல்லது வாக்களிக்க வராமலேயே இருந்துவிடுகிறார்கள்.

வேட்பாளர்கள் எவரும் பிடிக்கவில்லை என மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வாக்களிக்காமல் இருந்துவிட்டாலும் மக்களாட்சி எனும் பெயரில் புதிய ஆட்சி ஒன்று அமைக்கப்பட்டே தீரும். வாக்களித்த வர்களில் யார் அதிக வாக்குகள் பெற்றிருக் கிறார்கள் என்பது மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு தேவை. தேர்தல் வேண் டாம் என புறக்கணித்த மக்கள் அவர்களுக்குத் தேவையில்லை.

உதாரணத்துக்கு ஒரு தொகுதியில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்கள் மட்டுமே வாக்களித்து அதுபோக கூடுதலாக ஒரு வாக்கை அவர்களின் மனைவி, பிள்ளைகள் யாராவது வாக்களித்தாலே போதும். 6 வாக்குகள் மட்டுமே மொத்தத்தில் பதிவாகி, அதில் யாருக்கு ஒரு வாக்கு கூடுதலாக கிடைக்கிறதோ அவரே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக அறிவிக் கப்படுவார்.

ஒட்டுமொத்த வாக்காளர்களும் தேர் தலைப் புறக்கணித்தாலும் புதிய ஆட்சி ஒன்று உருவாக்கப்படும். அதாவது ஏறக்குறைய வெறும் வேட்பாளர்களைக் கொண்டே பல முதல்வர்களையும், பிரதமரையும் உருவாக்கி இந்த நாட்டை மக்களாட்சி எனும் பெயரில் மக்களுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் ஆண்டுவிட முடியும்.

வாக்களிக்க விரும்பாதவர்களின் வாயை அடைக்க தேர்தல் ஆணையம் செய்த தந்திரம்தான் ‘நோட்டா’ வாக்கு செலுத் தும் முறை. இது புரியாமல் சிலர் நோட்டாவில் வாக்களிக்கிறார்கள்.

இது தொடர்பாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, டெல்லியில் தேர் வாணையத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் என் நண்பரிடம் விளக்கம் கேட்டு அது இறுதியில் சண்டையாகவே முடிந்தது. என் கேள்விக்கு அவரால் இறுதிவரை விளக்கத்தைத் தரவே முடியவில்லை.

நம் நாட்டில் முதல் தேர்தலில் சராசரியாக 52 சதவீத வாக்குகளும், இறுதியாக நடந்த தேர்தலில் 78 சதவீதமும் பதிவாகியுள்ளன. மீதி இருக்கும் 22 சதவீத வாக்குகளையும் செலுத்தி 100 சதவீத வாக்குப்பதிவை செய்து காட்டினாலே போதும். மக்களுக்கு பிடிக்காத வேட் பாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசிய லில் இருந்தே தூக்கி எறியப்படுவார்கள்.

நூற்றுக்கு நூறு நேர்மையானவர்களை காண்பது அரிது என்கிற இக்காலத்தில் குறைந்த குறைகளையும், குறைந்த தீமை களையும் உடைய வேட்பாளர்களை நாம் இனங்கண்டு வாக்களித்தாலே, எதிர்காலத் தில் நல்லவர்கள் கையில் ஆட்சி அமையும்.

தொடர்புக்கு thankartamil@gmail.com

100% வாக்குப்பதிவுக்கு..

மக்களுக்கு வாக்குரிமையைக் கொடுப்பவர்கள் இதையெல்லாம் சட்டமாக்கினாலே, அனைவரும் மகிழ்ச்சியோடு 100% வாக்குப்பதிவு செய்வார்கள்.

* இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாது.

* குறிப்பிட்ட வயதுக்குமேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

* ஆட்சிக் காலத்தை மூன்றாண்டுகளாக்கி, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

* நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைக்கும் வேட்பாளர்கள் ஏழ்மை நிலையில் இருந்தால் அவர்களின் தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை அரசாங்கமே அளிக்க வேண்டும்.

* இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து அதன்பிறகு உருவாக்கப்படும் ஆட்சிதான் உண்மையான மக்களாட்சி. அதுவரை, இது வெறும் திருடர்கள் கையில் கொடுக்கப்பட்ட சாவிதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x