

கொடைக்கானல் கோடை விழாவின் தொடக்கமாக நேற்று நடைபெற்ற மலர் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.
கொடைக்கானல் கோடை விழா பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் நேற்று தொடங் கியது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எம்.நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் த.குணசேகரன் வரவேற்றார்.
வனத்துறை அமைச்சர் சி.சீனி வாசன் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். வேளாண்மைத் துறை அமைச்சர் துரைகண்ணு, உதயகுமார் எம்பி, முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவ நாதன், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் ச.விஜயகுமார், சுற்றுலா ஆணையர் ஹர்சஹாய் மீனா, தோட்டக்கலை இயக்குநர் லி.சித்ர சேனன் ஆகியோர் கலந்து கொண் டனர். மலர் கண்காட்சியில் தாஜ் மஹால், மயில் உருவங்கள் மலர் களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும் டேலியா, ரோஜா, ஆண்டேனியம், மேரி கோல்டு, கார்னிசியல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலர் வகைகள் பூத்துக்குலுங்கின. நேற்று பகலில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. மேகக்கூட்டங்கள் தழுவிச் சென்றதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானல் நோக்கிச் சென்ற வாகனங்கள் செண்பகனூர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதனால் 5 கி.மீ. தொலைவை கடக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. இதனால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் காண முடியாமல் பலர் பாதியிலேயே திரும்பினர்.
வாத்து பிடிக்கும் போட்டியில் சென்னை குழு முதலிடம்
கொடைக்கானல் கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வாத்து பிடிக்கும்போட்டி ஏரியில் நேற்று காலை நடைபெற்றது. கொடைக்கானல் போட்கிளப் சார்பில் நடைபெற்ற போட்டியில் 50 பேர் பங்கேற்றனர். ஒரு படகில் 5 பேர் குழுக்களாக அனுமதிக்கப்பட்டனர். இந்தப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த உமா தலைமையிலான குழுவினர் குறைந்த நேரத்தில் வாத்தைப் பிடித்து பரிசை பெற்றனர்.