

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து, தரங்கம்பாடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும் என்ற பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள்எதிர்பார்க்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய 5 ஒன்றியங்கள் உள்ளன. இவற்றுள், செம்பனார்கோவில் ஒன்றியம் 57 ஊராட்சி மன்றங்கள், ஒரு பேரூராட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பெரிய ஒன்றியமாக உள்ளது. ஆனால், அதற்கேற்ப வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. குறைந்த அளவிலன நிதிப்பகிர்வு போன்ற காரணங்களால் இந்த ஒன்றியத்துக்குட்டபட்ட பல்வேறு கிராமங்களில் போதுமான வளர்ச்சி இல்லை.
எனவே, இந்த ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, தரங்கம்பாடி தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.எஸ்.கருணாநிதி ‘இந்து தமிழ்’நாளிதழிடம் கூறியது:
2008-ம் ஆண்டு நான் நாகை மாவட்ட(மயிலாடுதுறை பிரிக்கப்படாதபோது) கவுன்சிலராக இருந்தபோது, செம்பனார்கோவில் ஒன்றியத்தைப் பிரித்து தரங்கம்பாடியை தலைமையிடமாகக் கொண்டு புதியஒன்றியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அளித்திருந்தேன்.
மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்திலும், திட்டக்குழுக் கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தியதுடன், அப்போதைய மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைத்தேன்.
பின்னர், செம்பனார்கோவில் ஒன்றியத்தை பிரிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான திட்ட வரைவுகூட தயாரிக்கப்பட்டது. ஆனால், சில அரசியல் தலையீடுகள் காரணமாக தொடர்ந்து அதுகுறித்துப் பரிசீலிக்கப்படவில்லை.
மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஒரே அளவு நிதியை அளிக்கின்றன.
ஆனால், செம்பனார்கோவில் பெரிய ஊராட்சி ஒன்றியமாக இருப்பதால் நிதிப் பற்றாகுறையும், வளர்ச்சித் திட்டப்பணிகளில் காலதாமதமும் ஏற்படுகிறது. மேலும், தரங்கம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செம்பனார்கோவில் சென்றுவரவும் சிரமமாக உள்ளது. எனவே, தரங்கம்பாடியை தலைமையிடமாகக் கொண்டு புதியஒன்றியம் அமைக்கப்பட்டால், இப்பகுதியில் உள்ள ஊராட்சிகள் வளர்ச்சியடையும் என்றார்.
தரங்கம்பாடி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் எஸ்.கந்தசாமி கூறியது: 2001-2006-ல் நான் தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலராக இருந்தபோது, இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரூராட்சிக் கூட்டத்தில் பேசியுள்ளேன். அரசுக்கும் கோரிக்கைஅனுப்பியுள்ளேன்.
நிர்வாக வசதிக்காகவும், நிதித் தேவைக்காகவும் பெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரிப்பதுதான் காலத்துக்குக்கேற்ற தேவையான முடிவாக இருக்க முடியும். அப்போதுதான் எல்லா கிராமங்களும் ஓரளவுக்கு சமமானவளர்ச்சியடைய முடியும். மக்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முடியும். அரசு திட்டங்களையும் பாரபட்சமின்றி ஒரே நேரத்தில் அனைத்து பகுதி மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும்.
இந்த ஒன்றியத்தில் பல ஊராட்சிகள் பரப்பளவில் பெரிதாக உள்ளன. அதனால், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நிதியும் கூடுதலாக தேவைப்படும். தரங்கம்பாடி முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றைக் கொண்ட ஒரு மையமாகவும் உள்ளது.
எனவே, தரங்கம்பாடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம்அமைக்கப்பட்டால், 10-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகள் கிடைக்கவும், வளர்ச்சி பெறவும் நிச்சயம் ஏதுவாக அமையும். பல ஆண்டு கால கோரிக்கையான இதை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.