Published : 19 May 2016 07:32 PM
Last Updated : 19 May 2016 07:32 PM

மையும் பொய்யும்: ஃபேஸ்புக் கருத்தாளர்கள் மீது தமிழிசை அதிருப்தி

'முகநூலில் பதிவு செய்துகொண்டிருப்பவர்கள் விரல் நுனியில் மையிட்டுக் கொள்ளாததால் பொய்யிட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளே அதிக இடங்களைப் பெறுகின்றன' என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

மேலும், மாற்று அரசியலை முன்வைக்க வேண்டும் என்று நினைத்த தலைவர்கள் ஒற்றுமையை முன்வைக்கத் தவறியதால் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் புதிய ஆட்சி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தலைமையேற்க இருக்கிற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்று அரசியலை முன்வைக்க வேண்டும் என்று நினைத்த தலைவர்கள் ஒற்றுமையை முன்வைக்கத் தவறியதால் இன்று தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று பாஜக முயற்சித்தது. ஆனால், அது முடியாமல் போயிருக்கிறது. பணபலம், அதிகார பலம் வலம் வரும்போது அதிக இடங்களை மற்றவர்களால் பெற இயலாமல் போய்விடுகிறது. வாக்குச்சாவடி அளவுக்கு அடாவடி அரசியல் நடக்கும்போது அடிதட்டு மக்களுக்கு பயன்தர நினைத்து போட்டியிடும் கட்சிகளின் நேர்மை நிறைவடைய முடியாத முடிவுகளைத் தருகிறது.

பாமர மக்களின் ஏழ்மை இந்த கட்சிகளால் பயன்படுத்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், படித்தவர்களின் வாக்கு மாற்றத்தை ஏற்படுத்த தவறியதற்கு காரணம் அவர்கள் வாக்களிக்க தவறியதும் ஒரு காரணம். அதனால் முகநூலில் பதிவு செய்துகொண்டிருப்பவர்கள் விரல் நுனியில் மையிட்டுக் கொள்ளாததால் பொய்யிட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளே அதிக இடங்களைப் பெறுகின்றன. எது எப்படி இருப்பினும் புதிய அரசு மக்களுக்கான நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x