Published : 16 Jun 2022 06:26 AM
Last Updated : 16 Jun 2022 06:26 AM

திருவண்ணாமலை | தொண்டமானூர் குன்றுகளில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கீறல்கள்: அரசு ஆவணப்படுத்த வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை

விலங்கு உருவ பாறை கீறல்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமானூர் குன்றுகளில் உள்ள பாறைகளில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தி.மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் பாலமுருகன், பழனிசாமி, மதன்மோகன், தண்டராம்பட்டு தர், சிற்றிங்கூர் ராஜா, தொண்டமானூர் கார்த்திக் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தொண்டமானூர் மலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கீறல்களை கண்டறிந்தனர். தொண்டமானூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றையொட்டி பல குன்றுகள் உள்ளன. இங்குள்ள குன்றுகளில் இருக்கும் குகைகளை அப்பகுதி மக்கள் பொடவு என்றழைக்கின்றனர். இந்த பொடவுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களால் வரையப்பட்ட பாறை கீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பாறை கீறல்களின் அமைப்பு மற்றும் வடிவம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறும்போது, ‘‘வெளவால் பொடவு என்ற இடத்தில் உள்ள பாறையின் தென்புற சரிவில் சுமார் 10 அடி அகலமும் 10 அடி நீளமும் உள்ள பாறையில் பல கோட்டுருவங்கள் காணப்படுகின்றன. இதில், மனித உருவம் ஒன்று கை வீசி ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நடந்து வருவது போல் உள்ளது. இந்த உருவத்தின் இடது கையருகை நீண்ட மரக்குச்சி அல்லது தடியின் அடியில் அம்பு போன்ற முனை இருக்கிறது.

இந்த உருவத்தின் கால்கள் அருகே இரண்டு ஆழமான குழிகள் குடையப்பட்டுள்ளன. அருகே இரண்டு கோடுகள் உள்ளன. இந்த உருவங்களுக்கு மேல்புறம் மனித உருவம் ஒன்று இரண்டு முக்கோணங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

தொண்டமானூர் குன்றில் உள்ள குகையில் கண்டறியப்பட்ட
மனித உருவ பாறை கீறல்.

அதனருகே சில கோடுகள் காணப்படுகின்றன. மற்றொரு பாறை தொகுதியில் கோடுகள் நேராகவும் குறுக்கு கோடுகளாகவும் தொடர்ச்சியாக நெருக்கமாக காணப்படுகின்றன. சில உருவங்கள் மனித உருவத்தை காட்டியிருப்பதைப் போல் இருந்தாலும், மான் அல்லது மாடு உருவம் ஒன்றும் உள்ளது. அதே ஊரில் அய்யர் பொடவு என்ற இடத்தில் உள்ள பாறை கீறல்கள் சதுரம், நீள் செவ்வகம், முக்கோண வடிவங்கள் காணப்படுகின்றன.

இங்குள்ள பாறை கீறல்கள் தமிழகத்தில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட பெருமுக்கல் (விழுப்புரம்), ஏற்பெட்டு (நீலகிரி) கேரளாவில் உள்ள எடக்கல் மலை குகையில் உள்ள கீறல்களுக்கு இணையாக உள்ளன. இந்த பாறை கீறல்கள் புதிய கற்காலத்தின் இறுதிப்பகுதியில் இவற்றை செதுக்கியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இவை சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்’’என்றார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக கிடைத்துள்ள இந்த பாறை கீறல்கள் மூலம் தண்டராம்பட்டு பகுதியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்துள்ளனர் என தெரியவருகிறது. இந்த ஊரில் நாகக்கல் பாறை கீறல்கள், புதிய கற்கால கருவிகள், குத்துக்குல், பெருங்கற்கால கற்பதுக்கைகள், நடுகற்கள் உள்ளிட்டவற்றை அரசு பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x