Published : 16 Jun 2022 06:08 AM
Last Updated : 16 Jun 2022 06:08 AM
ஆம்பூர்: பாலாற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க, தோல் கழிவு நீரை பாலாற்றில் திறந்துவிடும் தோல் தொழிற்சாலைகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்தம் செய்ய ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் ‘கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகளில் சேகரித்து வைக்கப்படும் தோல் கழிவுநீர் சுத்தப்படுத்தாமல் மழைக் காலங்களில் பாலாற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக வாணியம்பாடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
பாலாற்றில் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் நுரையுடன் செல்வதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பந்தப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கழிவுநீரை ஆற்றில் திறந்து விடும் தோல் தொழிற்சாலை நிறுவனங்களை ஆய்வு செய்து, உண்மை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் பாலாற்றில் மழை வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு - சோமலாபுரம் பாலாற்றில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பொங்கும் நுரையுடன் தண்ணீர் நேற்று பெருக்கெடுத்து ஓடியது.
இதை பார்த்த பொதுமக்கள் தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் திறக்கப்பட்டதால் பாலாற்றில் கழிவுநீர் நுரையுடன் ஓடுவதாகவும், சுத்திரிக்கப்படாத தோல் கழிவுநீரால் பாலாறு மாசு அடைவதாகவும், பாலாற்றில் ஓடும் கழிவுநீரை பருகும் கால்நடைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக கூறிய பொதுமக்கள், பாலாற்று நீரில் தோல் கழிவுகளை திறந்து விடும் தொழிற்சாலைகளின் தொடர் செயலுக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆட்சியர் தலைமையில் தனி குழு அமைத்து வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீரை பாலாற்றில் திறந்து விடும் தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு சீல் வைக்க வேண்டும்.
தண்ணீரில் கழிவுநீரை கலக்கும் தோல் தொழிற்சாலைகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆம்பூர் பாலாற்றில் பொங்கும் நுரையுடன் கழிவுநீர் தண்ணீரில் கலந்து ஓடும் காட்சி சமூக வளைதலங்களில் நேற்று வேகமாக வைரலானது.
இதற்கிடையே, வாணியம்பாடி மற்றும் ஆம்பூரை யொட்டியுள்ள பாலாற்றில் பொங்கும் நுரையுடன் செல்லும் தண்ணீர் தோல் கழிவுநீர் இல்லை என்றும், நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் ஒட்டு மொத்த கழிவுநீரும் பாலாற்றில் கலப்பதால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று மழைகாலங்களில் மழைநீருடன் கலந்து பாலாற்றுவெள்ளத்தில் நுரையுடன் செல்வதாக வாணியம்பாடி தோல் தொழிற்சாலை கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT