

திருவண்ணாமலை: தமிழகத்தில் உள்ள கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் பாஜகவின் எட்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக நேற்று மாலை வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘ஆன்மிக மக்கள் கிரிவலம் வரக்கூடிய கிரிவலப் பாதையில் நாத்திகரான கருணாநிதிக்கு ஏன் சிலை வைக்கவேண்டும்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்படும். பக்தர்கள் காணிக்கையாக அளித்த கோயில் நகைகளை திமுக அரசு உருக்குவது திருடுவதற்கு சமம். அந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஊழல் மையங்களாக மாறி வருகிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
பாஜக பிரமுகர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதை தவிர்த்து விட்டு தமிழக காவல் துறை இயக்குநர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.