Published : 15 Jun 2022 08:21 PM
Last Updated : 15 Jun 2022 08:21 PM

ராமேசுவரம் | கடற்படை, கடலோரக் காவல்படை பணிகளில் சேர மீனவ இளைஞர்களுக்கான பயிற்சி நிறைவு

உயர் அதிகாரிகளுடன் பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ்கள் பெற்ற 120 மீனவ இளைஞர்கள்.

ராமேஸ்வரம்: தமிழக மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை பணிகளில் சேருவதற்காக கடலோர பாதுகாப்பு குழுமம் (மெரைன் போலீஸ்) நடத்திய பயிற்சியை நிறைவு செய்த 120 மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தொடர்ந்து 3 மாத கால இலவச பயிற்சியை, 3 மையங்களில் நடத்துவதற்கு தகுந்த அரசாணையும் முதல் அணி பயிற்சிக்கு ரூ.45 லட்சத்திற்கான நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டது.

அதன்படி தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த தகுதி வாய்ந்த மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் முதற்கட்டமாக தலா 40 பேர் கொண்ட 3 குழுக்களுக்கு மொத்தம் 120 பேர்களுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பயிற்சி நடத்தப்பட்டது.

பயிற்சியில் கலந்து கொண்ட 120 பேருக்கும் உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடுகள், உபகரணங்கள், உடை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதம் ரூ.1000 உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

கடந்த 14.3.2022 அன்று தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு 14.06.2022 அன்றுடன் நிறைவடைந்தது. இப்பயிற்சியில் கலந்துக் கொண்ட மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் இதர துறைகள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான தங்களது உடற்திறன் மற்றும் எழுத்தித்திறன் தகுதிகளை இச்சிறப்பு பயிற்சிகள் மூலம் மேம்படுத்திக் கொண்டுள்ளதாக மெரைன் போலீஸார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆயுத படை வளாக மண்டபத்தில் புதன்கிழமை மாலை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு மெரைன் ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இதையடுத்து அடுத்த கட்டமாக 40 பேர் கொண்ட 3 குழுக்களுக்கு விரைவில் இலவச பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x