புதுச்சேரி | அரசு விழாவில் பாஜக பேனரை அகற்றியதால் ரேஷன்கார்டு முகாம் ரத்து: காங்கிரஸ் முற்றுகை

அரசு விழாவில் பாஜக பேனரை அகற்றியதால் ரேஷன்கார்டு முகாம் ரத்தானதால் போராட்டத்தில் ஈடுபட்ட தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், எம்பி வைத்திலிங்கம் மற்றும் அப்பகுதியினர்.
அரசு விழாவில் பாஜக பேனரை அகற்றியதால் ரேஷன்கார்டு முகாம் ரத்தானதால் போராட்டத்தில் ஈடுபட்ட தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், எம்பி வைத்திலிங்கம் மற்றும் அப்பகுதியினர்.
Updated on
1 min read

புதுச்சேரி: அரசு விழாவில் பாஜக பேனரை அகற்றியதால் ரேஷன்கார்டு முகாம் ரத்தானதால் குடிமைப்பொருள் வழங்கல்துறையை காங்கிரஸ் எம்எல்ஏ ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்ட போராட்டத்தில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் ஏற்பாட்டின்பேரில் குடிமைப்பொருள் வழங்கல்துறை சார்பில் ரேஷன்கார்டு மாற்றல் முகாம் நடத்த எம்எல்ஏ அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்டவர்களுக்கு குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கல், சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் சிகப்பு அட்டை ஆகியவை பெற முகாமில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் முகாமில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த பாஜகவினர், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்சரவணக்குமார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உருவப் படங்களோடு கூடிய பேனர்களை முகாம் நடக்கும் இடத்தின் முன்பு வைத்தனர். இதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசு விழாவில் கட்சி பேனர்களை எப்படி வைக்கலாம் என கேள்வி எழுப்பினர். போலீஸாரை வரவழைத்து, பேனர்களை அகற்றச் செய்தனர். இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்த சூழலில், திடீரென முகாம் ரத்து செய்யப்பட்டதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்தது. இதனால் எம்எல்ஏ வைத்தியநாதன், ஆதரவாளர்கள், தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கோபமடைந்தனர்.

இதனால் அப்பகுதியினர் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் எம்எல்ஏ தலைமையில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவர்கள் திடீரென ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸார் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீஸார் அலுவலக வாயிலை பூட்டி பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியவில்லை. தகவலறிந்த வைத்திலிங்கம் எம்பி சம்பவ இடத்துக்கு வந்தார். அவரும் எம்எல்ஏவுடன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் வைத்திலிங்கம் அங்கிருந்து கிளம்பிச்சென்றார். போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தி இயக்குநரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in