Published : 15 Jun 2022 02:35 PM
Last Updated : 15 Jun 2022 02:35 PM

நடத்துநர் இல்லா பேருந்துகள் இயக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: தினகரன்

சென்னை: "சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இந்தக் காலகட்டத்தில், கூடுதல் தனி கவனத்தோடு பேருந்துகளை இயக்க வேண்டிய ஓட்டுநர்களையே, கூடுதலாக நடத்துநர் பணியையும் கவனிக்கச் செய்யும் இந்த முயற்சி விபரீதமானது, ஆபத்தானது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்து அதை அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.

சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இந்தக் காலகட்டத்தில், கூடுதல் தனி கவனத்தோடு பேருந்துகளை இயக்க வேண்டிய ஓட்டுநர்களையே, கூடுதலாக நடத்துநர் பணியையும் கவனிக்கச் செய்யும் இந்த முயற்சி விபரீதமானது, ஆபத்தானதும் கூட.

சோதனை முயற்சியாக நாகப்பட்டினத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்திய முதல்நாளே சிறு விபத்து நடந்ததை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்திலிருந்து மீட்க எவ்வளவோ வழிகள் உள்ளபோது, மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் ஓட்டுநர்களுக்கு மன அழுத்தத்தையும் பணிச்சுமையையும் கொடுக்கும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட்டு, போதிய ஊழியர்களோடு பேருந்துகள் இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x