Published : 15 Jun 2022 01:02 PM
Last Updated : 15 Jun 2022 01:02 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலமான படைவீடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம்: மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள ஆன்மிக தலமான படைவீடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் அனைவருக்கும் ‘தரமான மருத்துவ வசதி‘ கிடைக்க வேண்டும் என்ற குரல், அரசியல் மேடைகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. ஆனால், நாட்டில் சரி பாதி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன. அதிலும், மலை கிராமங்கள் மற்றும் மலையடிவார கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, மருத்துவ வசதி என்பது கானல் நீராக உள்ளது. இந்த பட்டியலில் ஜவ்வாதுமலை அடிவாரத்தை ஒட்டியுள்ள ‘படைவீடு’ ஊராட்சியும் இடம் பிடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத் தில் மிகப்பெரிய ஊராட்சியில், படைவீடு ஊராட்சியும் ஒன்று. 17 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டது. படைவீடு ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்கள், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. விவசாயத்தை சார்ந்து இருப்பதால், விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த ஊராட்சி. ஆன்மிக தலமான படைவீட்டில் பழமையான ரேணு காம்பாள் கோயிலுக்கு, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் ஊராட்சியாகும். ஆடி மாத உற்சவம் என்பது புகழ் பெற்றது.

இத்தகைய சிறப்புமிக்க படைவீடு ஊராட்சிக்கு, ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் இருப்பது, கிராம மக்களை வேதனைடைய செய்துள்ளது. விவசாய பணிக்கு செல்லும்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகி ஆண்டுதோறும் உயிரி ழப்பு ஏற்படுகிறது.

காய்ச்சல் முதல் பிரசவம் வரை, காள சமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம், வேலூர் மற்றும் போளூர் அரசு மருத்துவமனை என தொலைதூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், கால நேரம் அதிகரித்து நோயின் பாதிப்பு தீவிரமடைகிறது. படைவீடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என திராவிட ஆட்சியாளர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் பலனில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

இது குறித்து சமூக ஆர்வலரான முனைவர் அமுல்ராஜ் கூறும் போது, “படைவீடு ஊராட்சியில் 17 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், எங்கள் ஊராட்சிக்கு, மருத்துவ வசதி இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங் காலமாக உள்ளன.

படைவீடு அம்மன் கோயிலில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள காளசமுத்திரம் ஊராட்சியில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெறுகிறோம். அதேநேரத்தில், படைவீடு ஊராட்சிக்கு உட்பட்ட 32 குக்கிராமங்களில் வசிப்பவர்கள் 10 கி.மீ., தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டும்.

எங்கள் ஊராட்சியில் வசிப் பவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இங்கிருந்து மருத்துவமனைக்கு செல்வதற் குள் அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடிக்கு ஓரிரு நபர்கள் உயிரிழக்கின்றனர். உடனடியாக சிகிச்சை கிடைக்காததால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

சமீபத்தில் 12 வயது சிறுவன், பாம்பு கடிக்கு உயிரிழந்துள்ளார். கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் பாதிக்கப்படுகின்றனர். எங்கள் ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கடந்த ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்பிறகு, எந்த முன்னேற்றமும் இல்லை. படை வீட்டில் இயங்கிய அம்மா மினி கிளீனிக்கும் மூடப்பட்டுவிட்டது.

படைவீட்டில் உள்ள ரேணுகாம்பாள் கோயிலுக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கிடைக்காது. கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு படைவீடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x