Published : 15 Jun 2022 01:13 PM
Last Updated : 15 Jun 2022 01:13 PM

தருமபுரி | மயானத்திற்கு சாலை வசதி கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்மணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் வசிக்கும் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எங்கள் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனி மயானத்திற்கு செல்வதற்கான பாதை முறையாக இல்லை.குண்டும் குழியுமாக உள்ள பாதையில் செல்வதால் சில நேரங்களில் பிரேதங்கள் தவறி விழுந்துவிடுகின்றன.

இதனால், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. விவசாய நிலங்கள் பெரும்பாலும் பிற சாதியினருக்கு சொந்தமானது என்பதால், அதில் இறங்கி செல்லதால், அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழுகிறது.எனவே முறையான சாலை வசதி அமைத்து தரக் கோரி மே 6-ம் தேதி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, ஆதி திராவிட நலத்துறை, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளேன். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x