Published : 15 Jun 2022 04:35 AM
Last Updated : 15 Jun 2022 04:35 AM

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம் - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) ரூ.2,877 கோடியில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம் தொடர்பாக, தமிழக வேலைவாய்ப்புத் துறை மற்றும் புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திறன் மேம்பாடு அவசியம்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு அவசியம். தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநிலத்தில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப திறன்பெற்ற தொழிலாளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

கடந்த 2021-22-ம் ஆண்டு தொழிலாளர் துறை மானியக் கோரிக்கையில் ‘‘தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்வோர், தொழில் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு பெறும்வகையில், பயிற்சியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி, அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் புனரமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவப்பட்டு, புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும். முன்னணி நிறுவனங்களில் பயிற்சி வழங்க, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது.

71 தொழிற்பயிற்சி நிலையங்கள்

அதன் அடிப்படையில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக அவற்றைத் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள், மென்பொருட்கள் ஆகியவை ரூ.2,877 கோடியில் நிறுவப்பட்டு, அவை தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படஉள்ளன.

இதன்மூலம் ரோபோடிக்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், இண்டஸ்ட்ரியல் பெயின்டிங், அட்வான்ஸ்டு வெல்டிங் போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

பணி வாய்ப்பு கிடைக்கும்

இதனால், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சிறந்த பயிற்சி பெற்று, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும், தனியார் தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனப் பணியாளர்களும் இவற்றில் பயிற்சி பெறுவர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுதீன், வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைவர் எஸ்.ராமதுரை, தலைமை நிதி அலுவலர் சவிதா பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x