Published : 15 Jun 2022 07:40 AM
Last Updated : 15 Jun 2022 07:40 AM

மேகேதாட்டு திட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மை, அக்கறையுடன் மேற்கொள்கிறது தமிழக அரசு: நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா விளக்கம்

சென்னை

கர்நாடகாவின் மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து வெளிப்படைத்தன்மை மற்றும் விவசாயிகள் மீதான அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின்நேற்றைய (ஜூன் 14) தலையங்கப்பக்கத்தில், ‘மேகேதாட்டு அணை:தமிழக அரசின் மெளனம்?’ என்றதலைப்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக அரசின் மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைதடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. விவசாயிகளின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் இந்தநடவடிக்கைகளை செய்திகளாகவும் வெளியிட்டு வருகிறது.

முதல்வர் கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதி பிரதமரிடம் அளித்த மனுவில், கர்நாடக அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டார். நீர்வளத் துறை அமைச்சர் கடந்த ஆண்டு ஜூலை 6-ம் தேதிமத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்தித்தும் இதை வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில் ஜூலை 16-ம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித ஒப்பதலும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியது.

கர்நாடக அரசு நடப்பு நிதி ஆண்டில் மேகேதாட்டு திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கியநிலையில், தமிழக சட்டப்பேரவையில் கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, திட்டத்துக்கு அனுமதியளிக்கவோ கூடாது என்று ஆணையம் மற்றும் மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம், கடந்த மார்ச் 23-ம்தேதி மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கும் அனுப்பப்பட்டது.

முதல்வர் கடந்த மார்ச் 31-ம்தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்து, கர்நாடகாவில் அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித ஒப்புதலும் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, பிரதமர் கடந்த மே 26-ம் தேதி சென்னை வந்த போது, கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு உள்ளிட்ட வேறு புதிய திட்டங்களுக்கு எந்த அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய ஜல்சக்தி அமைச்சகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிடும் படியும், மேகேதாட்டு திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தும்படியும் கோரிக்கை மனு அளித்தார்.

இற்கிடையில், காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மே 23-ம் தேதி வெளியிட்ட கடிதத்தில், மேகேதாட்டு திட்ட அறிக்கைகுறித்து விவாதிக்க ஆணையத்துக்கு உரிமை உள்ளதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்ததாக கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் எதிர்ப்பை கடந்த ஜூன் 4-ம்தேதி ஆணையத்துக்கு தெரிவித்ததுடன், மேகேதாட்டு பிரச்சினையை ஆணைய கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சினை குறித்து பிரத்யேகமனுவை ஜூன் 7-ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்தது. இதில், 2018 பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்குப் புறம்பாக,மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது என்று ஆணையத்துக்கு உத்தரவிடும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 7-ம் தேதி நீர்வளத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையிலும், மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்ததுடன், அது உச்ச நீதிமன்ற ஆணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமருக்கு ஜூன் 13-ம் தேதி முதல்வர் எழுதிய கடிதத்தில், இப்பிரச்சினை குறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன், இதுகுறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதுகுறித்து விவாதிக்க வேண்டாம் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிடும்படி கோரியுள்ளார். இதுகுறித்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடனும், விவசாயிகளின் நலன் மீது அக்கறையுடனும், கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x