Published : 15 Jun 2022 07:08 AM
Last Updated : 15 Jun 2022 07:08 AM
கோவை: ‘பாரத் கவுரவ்' ரயில்கள் திட்டத்தின்கீழ் நாட்டில் முதல் தனியார் ரயில், கோவையிலிருந்து ஷீரடிக்கு நேற்று மாலை இயக்கப்பட்டது.
இந்தியாவில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களுக்கு அடுத்தபடியாக, நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், பாரம்பரியத்தை பறைசாற்றவும் 'பாரத் கவுரவ்' ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் எனவும், இந்த ரயில்கள் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மட்டுமல்லாது, தனியாராலும் நிர்வகிக்கப்படும், குத்தகை அடிப்படையில் ரயில் சேவைகளை தனியார் மேற்கொள்ளலாம் என ரயில்வே சார்பில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாரத் கவுரவ் ரயில்கள் திட்டத்தின்கீழ் நாட்டின் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு நேற்று மாலை இயக்கப்பட்டது. இது ரயில்வே பணியாளர்களைப் பயன்படுத்தி முற்றிலும் தனியார் சார்பில் இயக்கப்படும் ரயில் சேவை ஆகும்.
கோவையில் உள்ள வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தனியார் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. முன்னதாக, ரயில் சேவை தொடக்க விழாவை முன்னிட்டு வடகோவை ரயில் நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க பணிப்பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
ரயில் சேவையை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.ஜி.2ஸ்ரீனிவாஸ், தெற்கு ரயில்வே தலைமை வர்த்தக மேலாளர் ஆர்.செந்தில்குமார், கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், தொழிலதிபர் மார்ட்டின் உள்ளிட்டோர் மலர் தூவி தொடங்கி வைத்தனர்.
தனியார் ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ் முதல் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இப்படியொரு திட்டத்தின் கீழ் இயக்கப்படும் முதல் ரயில் சேவை இது. இன்று (நேற்று) மாலை 6 மணிக்கு பயணத்தைத் தொடங்கியுள்ள ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூரு, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் நகரை சென்றடையும்.
அதே ரயில் மீண்டும் வரும் 18-ம் தேதி பகல் 12 மணிக்கு கோவை வந்தடையும். மந்த்ராலயம் ரயில் நிலையத்தில் மட்டும் இந்த ரயில்5 மணி நேரம் நிற்கும். மந்த்ராலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் சுற்றுலாவுக்கான ரயில் இது. மேலும் பல ரயில்கள் இதேபோல் இயக்கப்பட உள்ளன. தனியார் மட்டுமில்லாது, பல மாநில அரசுகளும் இவ்வாறு ரயில்களை இயக்க விருப்பம் தெரிவித்துஉள்ளன.
குறிப்பிட்ட தொகையை முன்தொகையாக செலுத்தி ரயில்களை இயக்கும் தனியார், பயணிகளின் பயணத்துக்கான கட்டண தொகையை நிர்ணயம் செய்ய முடியும். அந்த கட்டணம் மிகையாக இல்லாத வகையில் ரயில்வே கண்காணிக்கும். மொத்தமாக 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. முதல் ரயிலில் 1,100 பேர் பயணம் செய்கின்றனர். மாதம் 3 முறை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT