

திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 4 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்ததால் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை க.செல்வராஜ் ராஜினாமா செய்வதாகக் கூறி, தலைமைக்கு நேற்று கடிதம் அனுப்பியிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுகவினர் கூறும்போது; ‘திருப்பூர் வடக்கு மாவட்டத் துக்கு உட்பட்ட அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய 4 தொகுதி களிலும் திமுக தோல்வி யடைந்தது. செல்வராஜின் கட்சிப் பணி திருப்தியாக இல்லை. மாவட்ட செயலாளரான அவர் மற்ற தொகுதிகளின் நிலை குறித்து விசாரிக்கக்கூட இல்லை.’ என்கின்றனர் கட்சியினர்.
இது குறித்து க.செல்வராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தேர்தலுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற மா.செ. கூட்டத்தில், ‘பொறுப்பாளர்கள் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றிபெற வைக்க வேண்டும். இல்லையென்றால், தங்களது பதவியை ராஜினாமா செய்து கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி கடிதம் அனுப்பி உள்ளேன். திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழ கன், பொருளாளர் ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு வடக்கு மா.செ. பதவியில் இருந்து ராஜினமா செய்வதாக தபாலில் கடிதம் அனுப்பிவிட்டேன்.
அனைத்துத் தொகுதிகளிலும் பொதுவாகவே வேலைபார்த்தேன். எல்லா தொகுதியிலும் பரவலாக வாக்குகள் குறைந்துள்ளன, குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
எங்களது உழைப்பின் மேல் நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இந்த நேரத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. இது நான் எடுத்தமுடிவு மட்டுமே என்றார்.