Published : 15 Jun 2022 07:20 AM
Last Updated : 15 Jun 2022 07:20 AM

கோவளத்தில் ரூ.8 கோடியில் பணிகள்: அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையிட்டார்

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரை மற்றும் முதலியார்குப்பம் படகு இல்லத்தில் சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தங்களது மாலை பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கும் வகையில் கோவளம் கடற்கரையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்கரைக்கு வரும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் கடலில் குளிக்கச் செல்லும்போது அணிய வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு செய்து தரப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திலேயே முதன்முறையாக குப்பையில்லா நீலக்கொடி கடற்கரை என்ற தகுதியினை கோவளம் கடற்கரை பெற்றுள்ளது. இக்கடற்கரையை மேம்படுத்துவதற்கு ரூ.7.93 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், ரூ.6.72 கோடி உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்காக செலவு செய்யப்பட்டது. ரூ.1.21 கோடி சுற்றுச்சுவர், நீர் தொட்டி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்கரையை மேம்படுத்த தற்போது நடைபெற்று வரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு புதிய நீலக்கொடி கடற்கரைகள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, முதலியார் குப்பம் பகுதியில் உள்ள படகு இல்லத்தில் சுற்றுலாத் துறை மூலம் ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இதில், சுற்றுலா பயணிகளுக்கு நிழற்கொடை மற்றும் உணவகம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நத்தூரி,திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், லத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சுபலட்சுமி பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x