Published : 15 Jun 2022 06:08 AM
Last Updated : 15 Jun 2022 06:08 AM

சமூக பங்களிப்புத் திட்டத்தில் பின்தங்கிய கிராமங்கள், குழந்தைகளை தொழிற்சாலைகள் தத்தெடுக்க வேண்டும்: அமைச்சர் சந்திர பிரியங்கா

புதுவை அரசு தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கை அமைச்சர் சந்திர பிரியங்கா குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி: சமூக பங்களிப்புத் திட்டத்தில் பின்தங்கிய கிராமங்கள், குழந்தைகளை தொழிற்சாலைகள் தத்தெடுக்க வேண்டும் என அமைச்சர் கோரியுள்ளார்.

புதுவை அரசு தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கம், தொழிலாளர் துறை கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். புதுவையில் குழந்தை தொழிலாளர்கள் மிகவும் குறைவு. உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் கரோனா காலத்தில் மீண்டும் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். எத்தனை பள்ளிகள் இடஒதுக்கீடு அளிக்கிறது என்பது கேள்விக்குறிதான். அனைத்து சமுதாயத்திலும் ஏழைகள் உள்ளனர். இதில் சாதி, மத வித்தியாசம் இல்லை. என்னை பொறுத்தவரை வசதியா னவர்கள், வசதியற்றவர்கள் என இரண்டுபேர் தான் உள்ளனர். தொழிற்சாலைகள் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும். பின்தங்கிய கிராமங்களையும் தத்தெடுக்க வேண்டும். சிறுவர்கள் வேலைக்கு வர அவர்களின் குடும்ப சூழலும், ஏழ்மையும் தான் காரணம். இந்த சூழலை நாம் மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொழிலாளர் துறை செயலர் சுந்தரேசன் வரவேற்றார். அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், புதுவை சட்டப்பணிகள் ஆணைய மாவட்ட நீதிபதி செந்தில்குமார், சமூகநலத்துறை இயக்குநர் மதி பத்மாவதி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா, குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சிவசாமி ஆகியோர் பேசினர். தொழிலாளர் அதிகாரி மரிஜோஸ்பின் சித்ரா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x