

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 45 நாட்கள் நிறுத்தப்பட உள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு விரைந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக ரோப் கார் உள்ளது. மேலும் இழுவை ரயில் (வின்ச்), படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய் கின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை ரோப் கார் இயங்குவதை முழுமையாக பராமரிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி ஜூன் 16-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பழநி ரோப்கார் பராமரிப்பு பணி ஜூன் 16-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை, யானைப்பாதையை பயன்படுத்தி மலைக்கோயில் செல்லலாம்.