Published : 15 Jun 2022 06:44 AM
Last Updated : 15 Jun 2022 06:44 AM

கோவில்பட்டி | கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த வியாபாரி: ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சி

கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் நடந்த கோயில் விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்த நடராஜன் குடும்பத்துக்கு மலர்களை வழங்கி வரவேற்ற கிராம மக்கள்.

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்த வியாபாரியின் குடும்பத்தினரை கிராமத்தினர் திரண்டு வரவேற்றனர்.

கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், ராஜதுரை சகோதரர்கள், சென்னை கும்மிடிப்பூண்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றனர்.

தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு நடராஜன் தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் வந்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

6-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். 20 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை மற்றும் தம்பியுடன் சென்னை சென்றேன். தெருத்தெருவாக சைக்கிளில் சென்று பழைய இரும்பு சேகரித்து வியாபாரம் செய்தோம். தற்போது கும்மிடிப்பூண்டியில் பழைய இரும்புக் கடை வைத்துள்ளோம். சொந்த ஊருக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்று எண்ணினேன்.

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ரூ.2.20 லட்சத்துக்கு சம்மதித்ததால் அவர்களிடம் ஹெலிகாப்டரை முன்பதிவு செய்தேன். ஊரில் ஹெலிகாப்டர் நிறுவன ஆட்கள் வந்து, ஹெலிபேடு தயார் செய்தனர்.

நேற்று முன்தினம் காலை காரில் குடும்பத்தினர் பெங்களூரு சென்றோம். காலை 8.40 மணிக்குதான் ஹெலிகாப்டர் புறப்பட்டது. 11.50 மணிக்கு தெற்கு தீத்தாம்பட்டியை அடைந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோம். உறவினர்கள் நண்பர்களை சந்தித்தோம். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு பெங்களூரு சென்றோம். பின்னர், காரில் சென்னை வந்து சேர்ந்தோம்.

ஹெலிகாப்டர் செலவுக்காக தினமும் ரூ.500 சேர்த்து வைத்தேன். எங்களைப் போன்ற நடுத்தர வசதி கொண்டவர்கள் இப்படி ஆசைப்படுவது சற்று அதிகம் தான் என்றாலும், இதுபோன்ற கைக்கு எட்டாத சின்ன வயது ஆசைகள் நிறைவேறுவது அலாதியானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x