

கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமாருக்கு, ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் நேற்று கோவையில் வாக்கு சேகரித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் தொடர்பான குற்றச்சாட்டில் ஆரம்பத்திலிருந்தே பாஜக போலியான ஆவணங்களை முன்வைத்து வருகிறது. இப்போதும் போலியான சான்றிதழ்களையே அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பிரச்சினை உடனடியாக தீர்ந்துவிடப்போவதில்லை.
அகஸ்டா - வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் குற்றச்சாட்டு சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் பரப்பப்படுகிறது. ஆனால், சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் வளர்ச்சிக்கு இது என்றும் தடையாக இருக்காது. தமிழகம் மட்டுமல்ல, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதேபோல், ராஜஸ்தான் மாநில பள்ளிப் பாடத்திட்டத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் திட்டமிட்டு பாடத்திட்டக் குறிப்புகளை நீக்கியுள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், இப்போதுள்ள முதல்வரோ, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மக்கள் என யாரையும் சந்திப்பதில்லை. பிறகு எப்படி அவர்கள் வெற்றி பெறுவர்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.