Published : 15 Jun 2022 06:09 AM
Last Updated : 15 Jun 2022 06:09 AM

திருப்பத்தூர் அருகே மயானப்பகுதிக்கு பாதை வசதி கேட்டு 100 ஆண்டுகளாக போராடும் கிராமமக்கள்

கந்திலி அடுத்த செவ்வாத்தூர் ஊராட்சியில் ரயில்வே தண்டவாளத்தையொட்டி மயானப்பகுதிக்கு செல்லும் பாதை.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மயானப்பகுதிக்கு செல்ல பாதை வசதி கேட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக அரசு அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்து வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்ற ஏக்கத்தில் கிராமமக்கள் காத்திரு கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், செவ்வாத்தூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் ஆதிதிராவிடர் காலனியில் மட்டும் 850-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம் படுத்தி தரவேண்டும் என செவ்வாத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏ, எம்.பி.,யிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். ஆனால், 100 ஆண்டுகள் கடந்தும் இப்பகுதி மக்களின் பிரச்சினை மட்டும் இன்னும் தீர்க்கப்படாமல் இருப் பதால் பொதுமக்கள் கடும் வேதனையடைந்துள்ளனர்.

இது குறித்து புதூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘செவ்வாத்தூர் ஊராட்சியில் வசிப்பவர்கள் கூலி வேலை செய்பவர்கள், கால்நடை மேய்ப்போர், கட்டிடத் தொழிலாளி உள்ளிட்ட பல் வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.

எங்கள் பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. அனைத்து சாலைகளும் குண்டும், குழியு மாக உள்ளன. கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் குட்டைப்போல் தேங்குகிறது. தடையில்லாமல் குடிநீரை வழங்க எங்கள் காலனி பகுதியில் பல லட்சம் செலவில் 2 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால் பழுதடைந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை.

பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீரை தேடி அலைகிறோம். தண்ணீர் எடுக்க ரயில்வே தண்டவாளம் அருகேயும், சில நேரங்களில் தண்டவாளத்தை கடந்தும் பெண்கள், சிறுமிகள் செல்கின்றனர். பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று 2 அல்லது 3 குடம் தண்ணீரை எடுத்து வருகின்றனர்.

அதேபோல, எங்கள் பகுதியில் உயிரிழந்தவரின் உடல்கள் அருகேயுள்ள மயானப்பகுதியில் அடக்கம் செய்து வந்தோம். மயானப்பகுதிக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை சுமந்தபடி ஏறத்தாழ 1 கி.மீ., தொலைவுக்கு ரயில்வே தண்டவாளத்தையொட்டியே நடந்து செல்கிறோம். சில நேரங் களில் தண்டவாளத்தை கடந்து மயானப்பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் என பல அலுவலகங்களில் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகளை கேட்டு 3 தலைமுறைகளாக 100 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும் என தெரியவில்லை.

திருப்பத்தூர் மாவட்ட நிர் வாகம் எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். பழுத டைந்த ஆழ் துளை கிணறுகளை சீரமைத்து தடையில்லா குடிநீரை வழங்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x