“எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” - டி.ராஜேந்தர் உருக்கம்

“எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” - டி.ராஜேந்தர் உருக்கம்
Updated on
1 min read

சென்னை: உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், "எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இந்த இடைப்பட்ட நாளில் நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், என்னைப் பற்றிய, என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்த நிலைக்கு இன்று நிற்கிறேன் என்றால், அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன். என்னுடைய தன்னம்பிக்கையை மீறிய எனது கடவுள் நம்பிக்கைதான். எனக்கு பல காலகட்டத்தில் ஊடகங்கள் கைகொடுத்துள்ளீர்கள்.

நான் இப்போதுதான் வெளிநாடு செல்கிறேன், உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். நான் எதையுமே வாழ்க்கையில் மறைத்தவனே கிடையாது. இப்போதுதான் விமான நிலையம் வந்தேன், அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டதாக தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. நான் ஒரு சாதரணமன ஒரு நடிகன், கலைஞன், லட்சிய திமுகவென்ற சிறிய கட்சியை நடத்தக்கூடிய சாதாரண ஒரு ஆள்.

ஆனால், என்மீது பாசம் வைத்து, ஆதரவு காட்டி, பரிவோடு நான் நல்லாயிருக்க வேண்டும் என்று பலர் செய்த பிரார்த்தனைகள், ஆராதனைகளால்தான் இன்று நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய கட்சிக்காரர்கள், அபிமானிகள், என்னுடைய ரசிகர்கள், மகன் சிம்புவின் ரசிகர்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்கள், போனில் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தவர்கள், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் என்னை சந்தித்துவிட்டுச் சென்றார், இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in