Published : 14 Jun 2022 06:13 PM
Last Updated : 14 Jun 2022 06:13 PM

தன்னார்வ ரத்த கொடையாளர்களின் விபரங்களை பதிவு செய்ய செயலி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தன்னார்வ ரத்த கொடையாளர்களின் விபரங்களை பதிவு செய்ய செயலி உருவாக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக ரத்த தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை, எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ரத்த தானம் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஆண்களில் 4 முறைக்கு மேலும், பெண்களில் 3 முறைக்கு மேலும் ரத்த தானம் வழங்கியவர்களில் 61 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து தன்னார்வ ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு உலக குருதி கொடையாளர் தினத்தின் மையக் கருத்து "ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம்! ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களை காப்போம்!" என்பதாகும். 1 யூனிட் ரத்தம் நான்கு உயிர்களைக் காப்பாற்றும்.

ஓர் ஆண்டில் ஆண்கள் 4 முறையும், பெண்கள் 3 முறையும் ரத்த தானம் செய்தமைக்கு அரசின் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 97 அரசு ரத்த மையங்கள், 220 தனியார் ரத்த மையங்கள், 373 அரசு ரத்த சேமிப்பு மையங்கள், 139 தனியார் ரத்த சேமிப்பு மையங்கள் மற்றும் 42 அரசு ரத்த மூலக்கூறு பகுப்பாய்வு மையங்கள் செயல்படுகின்றன.

தமிழக அரசின் சார்பில் புதியதோர் திட்டமாக ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் தொடர் தன்னார்வ குருதி கொடையாளர்களின் விபரங்களை பதிவு செய்ய கணினி மயமாக்கப்பட்ட பதிவேடு மற்றும் செயலி உருவாக்கப்படும்.

தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் ரத்தம் சேகரிப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்தாண்டில் 3,43,667 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x