

சென்னை: மழைநீர் வடிகால் பணி காரணமாக இன்று இரவு ஜிஎஸ்டி சென்னை மவுண்ட், பாலாஜி மருத்துவமனை அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மவுண்ட், பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள் செல்லும் சாலையில் மற்றும் வெளி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே இந்த சாலைகளில் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று மற்றும் நாளை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சோதனை ஓட்டமும், 18 மற்றும் 19 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பத்து நிமிட தாமதத்தை எதிர்பார்த்து பயணத்தை திட்டமிட்ட வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்.
பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதுவுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா வழியாக) செல்லலாம்.
வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா சர்வீஸ் சாலை வழியாக) செல்லலாம்.
கத்திப்பாரா சர்வீஸ் சாலை (கிண்டி மவுத்தில்) வேலை நடைபெறும் போது வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் சிப்பெட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திருவிக தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம்.